மேகத்தின் செய்தி

பழைய ஆதரவற்ற

இரவுகள், நகரத்தின்

சந்தில் நின்று தனியாக ஒருவன்

பாடுகிறான், மறந்துவிட்டாயோ!

பசியுடன், துணையேதுமின்றி

பாதிராத்திரியில் தெருவில்

விளக்குத் தூணில் சாய்ந்து,

நீயொருவன் மட்டும் கேட்பதற்காய்.

பாதைகளின் முடிவில்

நீ என்கிறது நிலவொளி,

பாடினால் தீராத

மெல்லிய கனவுகள்,

தூரதூரங்கள் தாண்டி

கைநாறிப் பூமணக்கும் காற்றுகள்

நடுச்சாமப் பூச்சுடும்

பூத்த தாழைக் கயங்கள்

நான் ஒருவன், வசந்தங்கள்

அத்தனையும் வற்றித் தீர்ந்தவோர்

தீப்பிழம்பான நகரத்தில்

நாடக அரங்கின் உள்ளே

தீபகராகம் பாடி

சுயமாக எரியும் நேரம்

உயிரின் சாம்பலில்

காதல் எழுத்துக்களைக் குறிக்கிறேன்.

எவ்வளவோ பாதுகாப்பானது

இந்த அனாதைத் தன்மை, முன்பு

யக்ஷன் மேகத்திற்காகக் காத்து

நின்றான் விந்தியப் பள்ளத்தாக்கின்

பாலைவனத்தில், பருவநிலை சூனியமாய்

தூரங்களாய்;, காதலின்

மின்னல் கதிராய்

ஆகாயத்துச் செய்திகள்

பூமியில் விரகத்தில்

கட்டுண்டுக் கிடக்கின்றன

காதலரின் இதயங்கள்.

யாருமே இல்லாதவரின்

ஒவ்வொரு மூச்சும்

மேகமாய் உயர்ந்து

கார்மேகமாகிப் பெய்து

வாழ்வு துளிக்கிறது

மலையாளத்திலிருந்து தமிழில்: நா. இராமச்சந்திரன்