மற்றமை

‘மற்றமை’ முதல் இதழில் பழமொழியை எவ்வாறு உளவியல் பகுப்பாய்வு செய்யலாம் என்பது விளக்கப்பட்டிருந்தது. உளவியல் ஆய்வு நிகழ்த்துவது எளிதான காரியம் இல்லை என்பதை அதனின்றும் உணர முடிந்தது. மானுட மனத்தின் அடியாழத்திற்குச் சென்று பழமொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லும் பாணி சிறப்பாக இருந்தது. அதற்கு எவ்வளவு படிக்க வேண்டும் என்ற மலைப்பு ஒருபுறம் இருந்தாலும் நுணுக்கமாகத் தமிழ்ப் பழமொழிகளுக்குப் பொருத்திப் பார்த்து விளக்குவதிலுள்ள வலியையும் உணர முடிந்தது. இந்த என் அபிப்பிராயத்தைத் திரு. செல்லபாண்டியனிடம் தொலைபேசியில் சொன்னேன்.

நாட்டார் வழக்காறுகளைக் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் அது மக்களின் அனுபவ வாயிலாக அவர்களுடைய அடியாழத்திலிருந்து வெளிப்படும் மனவுணர்வுகள். அவ்வுணர்வுகள் வெளிப்படுத்தும் சொற்கள் முக்கியமானவை. அந்தச் சொற்கள் யாரிடமிருந்து என்ன உணர்வில் வெளிவருகின்றன என்பதை உளப்பகுப்பாய்வு முறையினைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்க இயலும் என்ற தம் வாதத்தை மிகக்கூர்மையாக முன்மொழிந்தார்.

பேராசிரியர் தே. லூர்து “சூழலியம் – பழமொழிகளை முன்வைத்து” என்ற நூலில், பழமொழிகளை, “நான் உளவியல் ஆய்வு செய்யவில்லை. செய்ய வேண்டும். அங்குதான் விடை கிடைக்கும்” என்று கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. திரு. செல்லபாண்டியனுடைய கூற்றின் வலிமையை என்னால் உணர முடிந்தது.

அடுத்ததாக, திரு. செல்லபாண்டியன் என்னிடம், “தமிழ்ப் பழமொழிகளுக்குத் தமிழ் நாட்டார் வழக்காற்றியலர்களின் பாணியில் விளக்கங்களை எழுதித் தர முடியுமா? அப்படிச் செய்வதென்றால் நான் கற்றுள்ள அணுகுமுறையின் அடிப்படையில் அப்பழமொழிகளைப் பகுப்பாய்வு செய்து விளக்கம் சொல்கிறேன். இரண்டையும் ‘மற்றமை’ இதழில் பிரசுரிப்போம்” என்றார்.

பழமொழிகளுக்கு மனம்போன போக்கில் விளக்கம் சொல்லிவிட முடியுமா? தமிழ் நாட்டார் வழக்காற்றியலர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள் என்பதை நான் எப்படி யூகிக்க முடியும். ஒரு வம்பினையல்லவா என் தலையில் வைத்துக் கட்டுகிறார் என்று நான் யோசித்தாலும் இந்த முயற்சி ஆர்வமூட்டுவதாக உள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன்.

நாட்டார் வழக்காற்றியலர்கள் என்றால் எந்தவகையினர்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அவர்களைப் பொத்தாம் பொதுவாகச் சொல்லி முடியாது. ஒரு நாட்டார் வழக்காற்றியலர் அமைப்பியலையோ (தொடர்பாட்டு அணுகுமுறை, வாய்பாட்டு அணுகுமுறை), செயல்பாட்டியலையோ, சூழலியலையோ, சமூகவியலையோ (சமூகவியலில் எந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர் என்பது வேறு), சமூக மொழியியலையோ, உளப்பகுப்பாய்வியலையோ (யாரைப் பின்பற்றுகிறார் என்பது அடுத்த வினா), வரலாற்றியலையோ தமது அணுகுமுறையாகக் கொண்டு பழமொழிகளுக்கு விளக்கம் சொல்லலாம். ஒரு நாட்டார் வழக்காற்றியலர் மேற்கண்ட எல்லாப் புலங்களையும் கற்றுத் தேர்ந்து அவற்றையெல்லாம் பின்பற்றி ஆய்வு செய்ய இயலாது. தாம் பின்பற்றும் கோட்பாட்டடிப்படையில் பழமொழிகளை ஆய்வு செய்யலாம்.

திரு. செல்லபாண்டியன் நாட்டார் வழக்காற்றியலர் என்று சொன்னது யாரை என்பது ஓரளவுக்குத் தட்டுப்படுகிறது. பெரிய analysis-க்குப் போகத் தேவையில்லை. பொதுவாகச் சொல்லப்படும் விளக்கம் என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் என்பதை உணர முடிகிறது.

இந்தப் பீடிகையோடு திரு. செல்லபாண்டியன் கூறிய பழமொழிக்கு வருவோம்.

“என்னைக் கெடுத்தது நரை,

என் மகளைக் கெடுத்தது முலை”.
ஒரு பாலியல் தொழில் புரியும் ஒரு தாய் கூறிய பழமொழி இது என்பது புரிகிறது. அதாவது, அந்தத் தாய்க்கு நரை தோன்றிவிட்டது. அதாவது வயதாகிவிட்டது. இனிமேல் தன்னிடம் யாரும் வரமாட்டார்கள். தனது தொழில் கெட்டுவிட்டது. வருமானம் இருக்காது. எனவே அவள் ‘என்னைக் கெடுத்தது நரை’ என்கிறாள். தன் மகள் பருவத்திற்கு வந்துவிட்டாள் என்பது அடுத்த வரியில் சொல்லப்படுகிறது. ஆனால், ‘கெடுத்தது’ என்று ஏன் சொல்ல வேண்டும்? தன்னிடத்தில் தன் மகள் தொழிலுக்குத் தயாராகிவிட்டாள் என்று சந்ததோஷப் படுவதற்குப் பதிலாக வருத்தப்படுவது போலல்லவா தோன்றுகிறது? ஒரு பழமொழி ஆர்வலர் பின்வருமாறு கூறினார். “எந்தத் தாயும் தான் தொழிலில் படும் கஷ்டத்தை மகள் படக்கூடாது என்றுதான் கருதுவாள். தன்னிடம் இதுவரை வந்தவர்கள் மகள் வளர்ந்து நிற்பதைப் பார்த்து இனி அவளை வேண்டியே வருவார்கள். தான் பட்ட துன்பத்தை இனி மகளும் படப்போகிறாளே என்று வருத்தப்படுவதையே இந்தப் பழமொழி குறிப்பிடுகிறது” என்று சொன்னார்.

இந்தப் பழமொழியை யார் யாரிடம் எப்போது எப்படி எதற்காகச் சொன்னார் என்ற குறிப்பு இல்லை. பொதுவாக நாட்டார் வழக்காற்றியலர் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பர். எந்தச் சூழலில் இந்தப் பழமொழி சொல்லப்பட்டது என்பது மிகவும் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பழமொழியைச் சொன்ன தகவலாளி திரு. செல்லபாண்டியன். அவர் நாட்டார் வழக்காற்றியலர் என்ன விளக்கத்தைத் தருவார்கள் என்பதை அறியவே இதனைச் சொன்னார். தொலைபேசியில் சொல்லப்பட்ட பழமொழி. இதுதான் இந்தப் பழமொழி சொல்லப்பட்ட சூழல். திரு. செல்லபாண்டியன் யாரிடம் இதைக் கேள்விப்பட்டார் என்பதும் தெரியாது. அதைச் சொன்னவர் எதற்காகச் சொன்னார் என்பதும் தெரியாது. ஒரு பழமொழி ஆர்வலருடைய கருத்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘அர்த்தத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரே வழியாகச் சூழல் அமைகிறது. அர்த்தப் படிமுறைகளையும், அர்தங்களைப் படிமுறை செய்வதையும் நோக்கி அது நம்மை அழைத்துச் செல்கிறது எனலாம். இது அடிப்படையில் சோதனை முறையிலான பட்டறிவு சார்ந்தது. ஒருவன் சூழலைப் பற்றி நிறைய அறிந்திருக்க வேண்டும் என்பதோடு உண்மையான அர்த்தங்களைக் கருத்துப் புலப்படுத்தம் செய்வதையும் உற்று நோக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது’ என்று தே. லூர்து லாரி ஹாங்கோவை (1986) மேற்கோள் காட்டுவார் (சூழலியம், 2008 / ப.36).

இந்த இடத்தில் பேராசிரியர் லூர்து அவர்களின் கூற்று பொருத்தமுடையதாக இருக்கும். “நாட்டார் வழக்காற்றுப் பனுவல்கள் சூழலைச் சார்ந்து அமைபவை. சூழல்களும். பனுவல்களுக்கு அப்பாற்பட்ட பண்புக்கூறுகளும் இல்லாமல் தொகுக்கப்பட்ட எல்லாப் பனுவல்களும் வெற்றுப் பனுவல்களே. இத்தகைய பனுவல்களுக்கு ஒருவன் தன் மனம் போன போக்கில் பொருள் கொள்ளக்கூடும். ஆனால் சூழலில்மட்டும்தான் பேச்சுவினைச் சூழ்பொருள் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். பனுவல்கள் அவற்றின் குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலுக்குக் கட்டுப்பட்டவை. குறிப்பிட்ட சமூகத்துக்கும் அவை வெளிப்படுத்தப்படும் மொழிகளுக்கும் கட்டுப்பட்டவை. நாட்டார் வழக்காற்றியலில் மொழியியல். சமூக மொழியியல். சமூகவியல். மானிடவியல். உளவியல். மெய்யியல் ஆகியவற்றிலிருந்து பல கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன”.