இனவரைவியல் சிறுகதைகள்

இனவரைவியல் சிறுகதைகள்

நா. இராமச்சந்திரன்

‘Ethnography’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ‘இனவரைவியல்’ என்ற பதத்தை மானிடவியலர்களும் நாட்டார் வழக்காற்றியலரும் பயன்படுத்துகின்றனர். ‘இனவிளக்கவியல்’ என்று அவர்களுள் ஒருசிலர் தொடக்கத்தில் குறிப்பிட்டனர். பக்தவத்சல பாரதி ‘பண்பாட்டு மானிடவியல்’ (1990) என்ற தமது நூலில் ‘இனக்குழுவியல்’ என்ற பதத்தைக் கையாண்டுள்ளார். ஆனால், அவர் தாம் எழுதிய ‘மானிடவியல் கோட்பாடுகள்’ (2005) என்ற நூலில் ‘இனவரைவியல்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். தற்பொழுது இனைவரைவியல் என்ற சொல் பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட ஒரு மானிடக் குழுவில் அல்லது வட்டாரத்தில் காணப்படும் அனைத்து வகையான மரபுகள் பற்றி மேற்கொள்ளப்படும் விளக்கமுறை ஆய்வே இனவரைவியல் ஆகும்” என்று புருன்வாண்ட் (Brunvand) குறிப்பிடுகிறார் (1986 : 329).

இவரது கூற்றில் மரபு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மரபு ரீதியாக மக்கள் குழுவினர் பின்பற்றுபவற்றை புருன்வாண்ட் கவனத்தில் கொண்டுள்ளார்.

‘‘எழுத்தாளன் யாரைப்பற்றி எழுதுகிறானோ, அந்த மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய விளக்க உரைகள், விவர அறிக்கைகளை உருவாக்கக் கூடிய விசாரணை முறை மற்றும் எழுத்து வடிவமே இனவரைவியல் ஆகும்” என்று டென்சின் (Denzin) கூறுகிறார் (1997 : xi).

இனவரைவியல் கீழ்க்கண்டவற்றுள் கவனம் செலுத்துவதை, தே.அ. மாசிலாமணி பின்வருமாறு குறிப்பிடுகிறார் (2004 : 27):

 அன்றாட வாழ்க்கையில் மக்கள் என்னென்ன செய்கிறார்கள்? (சான்றாக அவர்கள் ஈடுபடும் செயல்பாடுகள் யாவை? எவ்வாறு, யாரால், யாருக்காக ஒருங்கிணைக்கப்படுகின்றனர்?)

 எவ்வெவற்றை உற்பத்தி செய்து பயன்படுத்துகின்றனர்?

 பொருட்கள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?

 மக்கள் அறிந்து கொள்பவை, நினைப்பவை, உணர்பவை யாவை?

 தங்களிடையே கருத்துப்புலப்படுத்தம் செய்வது எவ்வாறு நடைபெறுகிறது?

 எவ்வாறு முடிவுகள் எடுகிக்றார்கள்? (எது சரி? எது தவறு? அங்கீகாரம் பெறுவது எவ்வாறு? விநோதமானவை எவை? அசாதாரணமானவை எவை? உண்மையானவை எவை?)

 பொருட்கள், விலங்குகள், மக்கள், இயற்கை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவற்றை எங்ஙெனம் வகைப்படுத்துகின்றனர்?

 வேலைப் பிரிவினை எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது? (பால், வயது, சமூக வர்க்கங்கள், தகுதிப்பாட்டுத் தரம் போன்ற அடிப்படைகளில்)

 குடும்பம் மற்றும் வீடு சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன?

மேலே குறிப்பிடப்பட்டவை இனவரைவியல் தரவுகளைச் சேகரிப்பதற்கு உறதுணையாக இருப்பவை.

ஓர் இனவரைவியல் தொகுப்பில் பின்வரும் கூறுகள் இடம்பெற வேண்டுமென்று பக்தவத்சல பாரதி குறிப்பிடுகிறார்: “புவிச் சூழலியல் (topography), சுற்றுச் சூழல் (environment), காலநிலை (climate), குடியிருப்பு முறை (settlement pattern), பொருள்சார் பண்பாடு (material culture), குடும்ப அமைப்பு, திருமண முறை, உறைவிட முறை (residence pattern), வாழ்வியற் சடங்குகள், குழந்தை வளர்ப்பு முறை, பாண்பாட்டுவயமாக்க முறை (enculturation), மக்களின் உளவியற் பாங்குகள், மணக்கொடை, மணவிலக்கு முறை, வாழ்க்கைப் பொருளாதாரம் (subsistence economy), தொழிற் பகுப்பு (division of labour), உற்பத்தி முறை, நுகர்வு முறை, பங்கீட்டு முறை, பரிமாற்ற முறை, கைவினைத் தொழில்கள், அரசியல் முறை, அதிகார உறவுகள், சமுகக் கட்டுப்பாடு, மரபுசார் சட்டங்கள் (customary laws), சமய நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், மந்திரம், சூனியம், விழாக்கள், இசை, விளையாட்டுக்கள், அழகியற் சிந்தனைகள், வழக்காறுகள் (folklore), ஈமச்சடங்குகள், பிற தொடர்புடைய செய்திகள் முதலியன. அவ்வாறு தொகுக்கப்படும் செய்திகள் ஒரு தனிப்பட்ட சமூகத்தைப் பற்றியதாக இருப்பதால் இனக்குழுவியல் நூல்கள் அனைத்தும் ‘தனிவரைவு நூல்கள்’ (monographs) எனக் கூறப்பெறும்” (1999 : 118-119).

மேற்கண்ட விளக்கங்கள் யாவும் ஓரளவு இனவரைவியலைப் புரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும். அடுத்ததாக இனவரைவியலுக்கும் இலக்கியத்திற்கும் இடையிலுள்ள உறவுகளைப் பார்க்கலாம்.

•••

“ஒரு இலக்கியப் படைப்பு சிறந்து விளங்க வேண்டுமானால் அதில் இடம்பெறும் மாந்தர்களும், அம்மாந்தர்களின் பின்புலத்தில் உள்ள சகல இயக்கங்களும், உரிய பொருட்களும் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட வேண்டும். இதற்கு மிகவும் உறுதுணையாக அமைவது அவ்விலக்கியத்தைப் படைக்கும் படைப்பாளியின் இனவரைவில் அறிவாகும். இலக்கியத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகள் அவ்விலக்கியத்தில் இடம்பெறும் பாத்திரங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பொருத்தமான பின்புலத்தை உருவாக்க உதவுகின்றன” என ஆ. சிவசுப்பிரமணியன் (2009 : 13-14) குறிப்பிடுகிறார்.

அவரது கூற்றின் அடிப்படையில் இலக்கியப் படைப்பாளிக்கு இனவரைவியல் அறிவு அவரது படைப்பிலக்கியத்தைச் செழுமைப் படுத்த உறுதுணையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஆனால், இனவரைவியலில் பயிற்சி எடுத்துவிட்டு வந்து எழுத்தாளர்கள் இலக்கியத்தைப் படைப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இனவரைவியல் அறிவுடைய ஆய்வாளர்கள் படைப்பிலக்கியங்களிலுள்ள இனவரைவியல் கூறுகளை இனங்காண முயற்சிக்கலாம்.

பண்டையத் தமிழிலக்கியங்களில் காணப்படும் இனவரைவியல் செய்திகளை ஆய்வாளர்கள் இனம் காணுகின்றனர். ஆ. சிவசுப்பிரமணியன் இனவரைவியலுக்கும் இலக்கியத்திற்கு இடையேயுள்ள உறவு குறித்துப் பின்வருமாறு விவாதிக்கிறார் (2009 : 12 – 13):

இனவரைவியலானது அறிவியல் பூர்வமானது. காய்தல் உவத்தலின்றி கறாராகச் சேகரிக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாக இது அமைகிறது. இதற்கு நேர்மாறாக இலக்கியமானது வெறும் செய்திகளின் தொகுப்பாக அன்றி அழகியல் பூர்வமாக அமைவது. படைப்பாளியின் உலகக் கண்ணோட்டத்திற்கேற்ப உருவாக்கப் படுவது. இந்நிலையில் இலக்கியத்திற்கும் இனவரைவியலுக்கும் எப்படித் தொடர்பிருக்க முடியுமென்ற வினா நம் உள்ளத்தில் தோன்றலாம். இதற்கான விடையை இனவரைவியல் என்ற அறிவுத்துறை உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர் வழங்கியுள்ளார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணையியலில் இடம் பெறும் சில நூற்பாக்கள் இனவரைவியல் செய்திகளுக்கும், இலக்கியத்திற்கும் உள்ள உறவை மிகத் தெளிவாகச் சுட்டுகின்றன.

முதற் பொருள் – கருப்பொருள் – உரிப்பொருள் என்று அகப் பொருளைத் தொல்காப்பியர் முத்திறப்படுத்துகிறார்.

………………………………. தொல்காப்பியர் குறிப்பிடும் முதற் பொருளானது இனவரைவியலில் (1) புவிச்சூழலியல் (2) சுற்றுச் சூழல் (3) கால நிலை எனக் குறிப்பிடப்படுகிறது.

……………………………….. (1) தெய்வம் (2) உணவுவகை (3) விலங்குவகை (4) மரம், செடி, கொடி வகை (5) பறவை வகை (6) ஐவகை நிலத்திற்கும் உரிய பறை (தப்பை) வகை (7) தொழில் வகை (8) யாழ் வகை என்ற எட்டும் கருப்பொருளாம்.

இவை மட்டுமின்றி, இன்னும் உரியனவற்றையும் குறிக்கும் முறையில் “அவ்வகை பிறவும் கருவென மொழிப” என்று குறிப்பிட்டுள்ளார். ……………….. தொல்காப்பியர் வகைப்படுத்தும் கருப்பொருள்கள் மேலே குறிப்பிட்ட இனவரைவியல் தரவுகளில் இடம் பெற்றுள்ளன. அடுத்து ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய மக்களின் பெயர்களை, நிலத்தாலமையும் பெயர், தொழிலால் அமையும் பெயர் என்றும் பாகுபடுத்துகிறார்.

தொல்காப்பியர் வகுத்துள்ள இந்நெறிமுறை, இலக்கியம் படைப்பவன் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை அம்சம் என்பதைப் போதிக்கின்றது. படைப்பாளி ஒருவன் சுயசிந்தனை என்ற எல்லைக்குள் நின்று மட்டும் ஒரு இலக்கியத்தைப் படைத்து விட முடியாது என்பதே அது. அவனைச் சுற்றியுள்ள புற உலகின் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய அனைத்தையும் உற்று நோக்கி அவற்றின் தனிப்பட்ட இயல்புகளையும் இயக்கங்களையும் இணைத்து இலக்கியம் படைக்க வேண்டுமென்பதே தொல்காப்பியர் கருத்தாகும். “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” என்று அவர் குறிப்பிடுவதில் இக்கருத்து அடங்கியுள்ளது”.

இனவரைவியல் என்பது ஒரு இனக்குழு குறித்த முழுமையான தகவல்களை உள்ளடக்கியது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். எழுத்தாளர்களுடைய படைப்பிலக்கியங்களில் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைப் பற்றிய முழு இனவரைவியல் தகவல்களும் இடம் பெறும் என்று கருதிவிட முடியாது. ஆனாலும், நாவல் என்பது முழுமையான இனவரைவியலைத் தரும் இலக்கியவடிவம் என்று கூற முடியாது. நாவலில் வேண்டுமானால் சோதனை முயற்சியாக அதனைச் செய்து பார்க்கலாம். ஆனால், சிறுகதைகளில் ஒரு பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் இடம்பெறச் செய்ய இயலாது.

இனவரைவியல் என்பது அறிவியல் தன்மை கொண்டது, விருப்பு வெறுப்பு இன்றி சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டது என்று ஒரு காலத்தில் கருதி வந்தோம். ஆனால், அக்கருத்து தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. படைப்பிலக்கியங்களில் எழுத்தாளரின் தன்னிலை வெளிப்படுவது போல் இனவரைவியலிலும், தரவுகளைச் சேகரிப்பது முதல் எழுதுவது வரை ஆய்வாளரது தன்னிலையானது இடம் பெற வாய்ப்புள்ளது என்ற கருத்து ஆய்வுலகில் நிலவுகிறது.

“…………. மானிடவியலின் நீண்ட பயணத்திற்குப் பின்னர் இப்போது மரபான இனவரைவியல் குறித்து முனைப்பான மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய திறனாய்வாளர்கள் மரபான இனவரைவியலில் ஆய்வாளரின் தன்னிலையும் (subjectivism), தன்னுணர்வுகளும் பிரதிபலிக்கின்றது என்றும், இவை வழியேதான் அப்பண்பாடு மற்றவர்களுக்கு எழுத்துவடிவில் எடுத்துரைக்கப்படுகின்றது என்றும் விமர்சனம் செய்கின்றனர். பண்பாட்டின் மெய்மைகள் (facts) யாவும் களப்பணியில் ஆய்வாளரின் புற, அக உணர்வுகளுடன் உணரப்பட்டு எடுத்துரைக்கப்படுகின்றன என்பர். ஆதலின், பண்பாட்டைப் புரிந்து கொள்வதிலும் விவரிப்பதிலும் ஆய்வாளரின் தன்னையறியா தன்னிலை உணர்வு இதில் வெளிப்படுகின்றது. இவ்விவரிப்பில் அவரது பிரதிபலிப்புகள் காணப்படும் என்பதால் இத்தகு இனவரைவியல் ‘பிரதிபலிப்பு இனவரைவியல்’ (reflexive ethnography) என அடையாளப்படுத்தப்பட வேண்டுமென்பர்” (பக்தவத்சல பாரதி, 2005 : 387-388).

எழுத்தைப் பிரதானமாகக் கொண்ட இனவரைவியலில், அதை எழுதுபவர் எவ்வாறு பண்பாட்டுச் செயல்பாடுகளை அர்த்தப்படுத்துகிறாரோ அவற்றைத் தாம் நாம் அறியமுடிகிறது. எனவே பனுவல் வகைகளைப் பெருக்குவதன் வழி இனவரைவியலரின் தன்னிலையைக் குறைக்க இயலும் என்று தற்போது வாதிக்கின்றனர்.

படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரை, அது தனிமனிதரின் படைப்பு. அவர் எவ்வாறு ஒரு பண்பாட்டைப் பார்க்கிறாரோ அவ்வாறே அதனைப் பதிவு செய்ய முயற்சிக்கிறார்; அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பண்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதுகிறாரோ அதற்கேற்ப இலக்கியத்தைப் படைத்துக் காட்டுகிறார். இனவரைவியலரைப் போல, புறத்தே இருந்து ஒரு பண்பாட்டை உற்று நோக்கித் தாம் அதை எவ்வாறு புரிந்து கொண்டாரோ அந்தத் தன்னிலையோடு எழுத்தாளர் தமது படைப்பை உருவாக்குகிறார். அல்லது, தாம் சார்ந்துள்ள பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, தமது பண்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்துக்களை உருவாக்குகிறார்.

இந்தக் கண்ணோட்டத்துடன் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றில் காணப்படும் இனவரைவியல் கூறுகளையும் இனவரைவியல் எழுத்து முறையையும் நாம் அணுகலாம். ‘இலக்கிய இனவரைவியல் அணுகுமுறை’ பற்றிக் கூறும்போது பக்தவத்சல பாரதி, அழகியநாயகி அம்மாளின் ‘கவலை’, நாஞ்சில் நாடனின் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’, பழமலய் எழுதிய ‘சனங்களின் கதை’ ஆகியவற்றை எடுத்துக் காட்டுவார்.

“பழமலய்யின் கவிதைகள் இனவரைவியல் கவிதைகளா? அழகியநாகி அம்மாளின் கவலை இனவரைவியல் சுயசரிதையா? என வரையறை செய்யப்படும்போது பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இனவரைவியலின் உயிர் மூச்சு நேரில் கண்டு, ஓர்ந்து எழுதுதலாகும். எழுதப்படும் சமூகத்தின் காலம், இடம், சூழல் இவற்றின் அடிப்படையில் எதார்த்தம் பனுவலில் பிரதிபலிக்கப்பட வேண்டும். பனுவலின் உள்ளடக்கம் நேரடி உற்றுநோக்கலின் அடிப்படையிலான எதார்த்தத்தைக் (empirical reality) காட்டுவதாகவும் இருக்க வேண்டும். புனைவும் பூச்சும் தவிர்க்கப்படல் வேண்டும். பனுவலானது களத்திற்குச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அது எதார்த்தத்தை, நடப்பியலை நிரூபிக்க வேண்டும். எடுத்துக் கொண்ட பொருளின் முழுமையியத்தை (holism) அடைய முற்பட வேண்டும். வாழிடம், காலம், தகவலாளிகள் பற்றிய பதிவுகள் இடம்பெற வேண்டும்.

இந்த அளவுகோல்கள் எல்லாம் செவ்வியல் இனவரைவியலுக்குரியவை. பின்னை நவீனத்துவம் முழுமை என்பதையே ஆட்சேபிக்கிறது. பனுவல்கள் சிறு சிறு துண்டுகளாகவும், சிதறல்களாகவும் இருக்கலாம் என்கிறது. ஆனால் களப்பணி யதார்த்தத்தை அது நிராகரிக்கவில்லை” (பக்தவத்சல பாரதி, 2005 : 402 – 403).

தமிழ்ச் சிறுகதைகளை இனவரைவியல் நோக்கில் பார்க்கும்போது அவற்றைப் பனுவல்களின் சிறுசிறு துண்டுகளாகவும் சிதறல்களாகவும் காண முடியும். ஆனால், பல சிறுகதை எழுத்தாளர்கள், அவர்கள் எழுதும் பண்பாடு குறித்து முழுமையான பார்வையைக் கொண்டு அப்பண்பாட்டை உள்வாங்கித் தமது சிறுகதைகளைப் படைக்கின்றனர். அவர்கள் எழுதும் கதைகளின் உள்ளடக்கத்தை ஐந்து வரிகளில் சொல்லிவிடலாம். ஆனால், அவற்றை எவ்வாறு படைத்துள்ளனர் என்பதை நோக்கும்போது, அவர்களுடைய பண்பாட்டுச் சித்திரிப்புக்களை மதிப்பிட முடிகிறது. அதாவது, ‘எதனைப் படைத்துள்ளார்?’ என்பதோடு ‘எவ்வாறு படைத்துள்ளார்?’, ‘அதற்காக அவர் கையாளும் மொழி எத்தகையது?’ ஆகியவற்றை நோக்க வேண்டியுள்ளது.

•••

இனவரைவியல் செய்திகளைச் சிறுகதை எழுத்தாளர்கள் சுய அனுபவத்தின் மூலமாகவும் களஆய்வு மூலமாகவும் நூல்கள் வாயிலாகவும் அறிந்து கொள்கின்றனர்.

கதை சொல்றதில் எங்க பாட்டிக்கு ஈடா இன்னொருத்தர் பொறந்து வரணும். அவ்ளோ கதை சொல்வா. தெருப் புள்ளைங்க பூராவுக்கும் எங்க வளவுலதான் ராப்படுக்கை. மழைக்காலத்துலதான் அமுட்டுப் பேரும் படுக்கத் திண்டாட்டமாயிரும். அந்தா அங்க இடிஞ்சி குட்டிச்செவரா கெடக்கே அதுதான் அப்ப ஸ்கோல். ஸ்கோல்னா என்ன, ராமம் போட்ட வாத்தியார் ஒருவர் மாசத்துல ரண்டொருநாள் வந்து போறதுதான். இந்தநாள்ல பூட்டித்தான் கெடக்கும். நான்கூட ஒரு வருசம் போனேன். எங்கூர்லயே மொதமொத படிக்கப் போனவள்னுதான் எனக்கு பள்ளிகொடத்தாள்னு பேர் வந்ததது. எனக்கப்புறந்தான் அஞ்சாறு பொண்ணுங்க சேந்தாங்க. நாங்க என்னா பண்ணுவம்னா பாட்டியோட அந்த ஸ்கோல் நடைக்குப் போயிருவம். மழைக்கு பயந்து ஒண்டியிருக்குற ஆடுங்க தள்ளியிருக்கும் புளுக்கைய தொவரம்மார்ல ஒதுக்கித் தளினப்புறம் சபை கூடும். செவத்தோரமா ஆரம்பிச்சு வட்டங்கட்டி ஒக்காந்தா நான்தான் உம் கொட்டுவேன்னு அடிபிடி நடக்கும். கரோமுரோன்னு கூச்சலாயிரும். பத்தாததுக்கு ஆடுங்களும் பயத்துல மொட்டவாலை ஆட்டிக்கிட்டு செருமும். அடங்கலைன்னா நான் போயிருவேன்னு பாட்டி ஒரு சத்தம் குடுத்தாள்னா போதும் அத்தின கூச்சலும் அமிஞ்சிரும். அதுல அதிசயம் என்னான்னா ஆடுங்க கூட கம்முனு அடங்கிக் கேக்கிறதுதான்.

பாதி கதையில அஞ்சாறு பேருக்கு தலை சாஞ்சிடும். கடைசி வரைக்கும் கதையைக் கேட்டு முடிச்சிட்டுதான் தூங்கினேன்னு சொன்னது ஒருத்தருமில்லை. ஏன்னா பாட்டி ஒரு நாள்லயும் முடியிற கதையைச் சொன்னதேயில்லை. மறாநாள் வந்து நேத்து எங்க நிறுத்தினேன்னு கேட்பாள்; ஒருத்தருக்கும் சொல்ல வராது. எல்லாருமே தூங்கிப் போனப்புறமும் பாட்டி கதை சொல்லிக்கிட்டே இருந்திருக்கிறா. ஆரம்பிச்சக் கதைய முடிக்காமாட்டாம நாங்கள்லாம் தூங்கிட்டோம்னு தெரிஞ்சிக்கிடே சொல்லிக்கிட்டிருந்தாளோ என்னமோ… ஆனா கடைசிவரைக்கும் ஆடுங்க கேட்டிருக்கும்.

ஒரு கதைச் சொல்லியைப் பற்றிய ஆதவன் தீட்சண்யாவின் வருணிப்பு இது (சொல்லவே முடியாக கதைகளின் கதை). இனவரைவியலர் கூறும் மிகக் கூர்மையான உற்று நோக்கல் இந்த வருணிப்பில் இருக்கிறது. வெறுமனே கதைச் சொல்லியை மட்டும் எழுத்தாளர் வருணிக்கவில்லை. கிராமத்துப் பள்ளிக்கூடம், படிக்கச் செல்லும் குழந்தைகள், கதை சொல்லும் பாணி, கதை கேட்கும் பாணி இவற்றை ஒரு இனவரைவியலரின் தன்மையோடு ஆதவன் தீட்சண்யா சித்திரித்துள்ளார். அவரது பல சிறுகதைகளில் இந்தத் தன்மையைக் காணலாம்

இதுபோன்ற சித்திரிப்பினைப் பா. செயப்பிரகாசம் கதைகளிலும் காணலாம். கரிசல் பகுதியின் பண்பாட்டையும் மொழியையும் வாழ்வியல் சிக்கல்களையும் இனவரைவியல் தன்மையோடு அவரது சிறுகதைகள் கூர்மையாக வெளிப்படுத்துகின்றன. “தாலியில் பூச்சுடியவர்கள்” என்ற கதையில்,

தாலியில் பூச்சூடிய பள்ளப் பெண்களின் குலவை மேலெழுந்தது. தாலி நுனியில் கட்டி, அவர்களின் நெஞ்சங்களின் மீது ஆடிய பூக்கள் நேராக அங்கிருந்து வாசனையை எடுத்துக் கொண்டன போல் தோன்றின. உயர் ஜாதி வீட்டுப் பெண்கள் தவிர, வேறு யாரும் கூந்தலில் பூச்சூடிக் கொள்வது அனுமதிக்கப்படாமலிருந்தது. தாலியில் பூச்சூடிக் கொள்வது பழக்க வழக்கமாகியது.

இது அந்தக் கதையில் வரும் செய்தி. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்கள் தலையில் பூச்சூட அனுமதி மறுக்கப்படும் வழக்கத்தைச் சொல்வதன் மூலமாக உயர் சாதிக்காரர்களாகி ரெட்டியார்களின் மேலாதிக்கத்தையும் அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொடுமைப் படுத்துவதையும் பா. செயப்பிரகாசம் வெளிப்படுத்துகிறார்.

கரிசல் காட்டிலுள்ள அந்த ஊரை வருணிக்கும் போது சாதியப் படிநிலைகளையும் ஊர்க்கட்டுப்பாட்டுகளையும் நுட்பமாக இனவரைவியலரின் கூர்மையோடு வெளிப்படுத்துகிறார்:

எங்கே பேனாலும் இந்தப் புறக்கணிப்பு காத்திருக்கிறது. கம்மாத் தண்ணிக்குப் போனால் ஊரைச் சுற்றிப் போக வேண்டுமென்கிறார்கள்.

கொதிக்கிற வெயிலானாலும் முழங்கால்வரை சகதி ஒட்டுகிற மழைக்காலமானாலும் ஊரைச் சுற்றியே போகவேண்டியிருக்கிறது. கம்மாயின் தண்ணீர் வற்றி, ஊத்துத் தோண்டியிருக்கிறபோது, குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறபோது, அங்கேயும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு வாளி, அரை வாளித் தண்ணீர் ஊத்த மாட்டாங்களா என்று நாள் முழுதும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் யாரும் தண்ணீர் விடாமலே, தண்ணீர் இல்லாமலே திரும்பி வந்திருக்கிறார்கள்.

கரிசல் காட்டு ஊர்களின் நிலையை பா. செயப்பிரகாசத்தின் இந்த விளக்கம் ஒரு சித்திரம் போல் மனதில் பதிய வைக்கிறது.

ஊர்க் கட்டுப்பாட்டை மீறி ஒடுக்கப்பட்ட பெண்கள் வீதி வழியே தண்ணீர் எடுத்துப் போகும்போது உயர்சாதிக் காரர்களின் மனநிலையைக் கூறும் அதே நேரத்தில், நிலவுடைமை தன்மை கொண்ட ஓர் ஊரின் அமைப்பையும் இந்தக் கதை வாசகர்களுக்கு உணர்த்துகிறது.

இனவரைவியல் தன்மை கொண்ட சிறுகதைகளுக்குக் குமாரசெல்வாவின் கதைகள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன. ‘கயம்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள கயம் என்ற கதையில், பரமேஸ்வரன் நாயர் என்ற கதாப் பத்திரத்தை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்:

……………….. சாதியில தாழ்ந்த பயக்களுக்குக் காசு சக்கறம் கண்ணில் படுவதே அருமை என்றிருந்த காலம். வீடுகளின் பின்புறம் இருக்கும் காடிவெள்ளப் பானைகளில் ஊற்றப்பட வேண்டிய வஸ்துக்களைக் கொடுத்து நாள்முழுக்க வேலை வாங்கலாம் என அமைந்த நாட்கள். அந்தத் தேக்கத்தை உடைத்துக்கொண்டு ‘ரப்பர்’ என்னும் பெருவெள்ளம் ஊருக்கு வந்தது. எல்லாப் பெருமக்களும் யாருக்கும் வேண்டாம் எனக் கிடந்த மலம் பொற்றைகளில் ரப்பர் பிடிப்பித்து நிலங்களை விலைமதிப்புள்ள சொத்துக்களாகவும் மாற்றினார்கள். எல்லாவனுவளும் பள்ளிக்கூடம் போய் பணம் செலவாக்கித் தங்கள் பிள்ளைகளை வாத்தியார்களாகவும், டாக்டர்களாகவும் உதிதியோகம் தேடவைத்ததுதான் அவருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. தான் மட்டுமே வலம் வந்த ரோட்டில் தனது பழைய ‘றாயல் என்பீல்டு’ புல்லெட்டுக்கு எதிராகப் பயக்க புதிய டூவீலர்களிலம், கார்களிலும் கீறிச்செல்லும்போது வந்த ஆத்திரம்தான், ‘ஈ பெலயாடிமவன்ற ரப்பர் வேண்டா’ என்று ரப்பர் மரத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க அவரைத் தூண்டி மரச்சினியையே தொடர்ந்து பயிரிடும்படியான உத்வேகத்தைத் தந்தது.

குமாரசெல்வாவின் இந்த விளக்கம் விளவங்கோடு வட்டத்தின் மேற்குப் பகுதியில் ‘ரப்பர்’ மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் நாடார் சாதியினர் பொருளாதாரத்தில் மேல்நிலைக்கு வந்ததை விவரிப்பதுடன், அதுவரை நிலவுடைமைக் காரர்களாக இருந்த நாயர்கள் அதனைக் கண்டு பொறாமைப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொருளாதாரச் செயல்பாடுகள் அந்தப் பகுதியைப் பண்பாட்டு ரீதியாக எவ்வாறு மாற்றம் செய்கின்றன என்பதை குமாரசெல்வாவின் விளக்கம் சிறப்பாக வாசகர்களுக்குத் தருகின்றது.

‘உயிர் மரணம்’ என்ற குமார செல்வாவின் கதையில் வரும் ஒரு சிறு பகுதி:

அருமனைப் பக்கம் பெட்டிவைக்கச் சென்போது கடாட்சம் ஆனையடி வைத்திச்சியைக் கண்டார். மறுநாள் பண்டுவம் பாக்க வந்தவளைத் தெக்கது பக்கம் கொண்டு இருத்தி உபசரித்தார். கிழவி, கடாட்சம் காட்டிய அன்பில் திக்குமுக்காடிப் போனாள். ‘பணம் பணமா வந்தாலும் இந்த ஆளபோல மனம் மனமா இருக்களும். நம்மளக் கொண்டு அதுக்கு பற்றுமா?’ என்றும் மனசில் கருதினாள்.

“மோளே, என்ன மீனுடி தின்ன?”

“கட்டாவு”

”ஓ. . .”

வாயத் தெறக்கவே முடியல்ல. பேசியதுகூட கஷ்டம். நல்லா வலிக்குது பாட்டி.”

கிழவி நாடிபிடித்துப் பார்த்துவிட்டு, ‘கொழப்பம் இல்ல’ என்றாள். சுற்றுமுற்றும் யாராவது தென்படுகிறார்களா எனப் பார்த்தாள். சற்று தூரத்தில் தேன்குப்பிகளைப் பார்சல் செய்து கொண்டிருந்த பையனை அழைத்தாள்.

“காக்கிலம் தெரியுமாடா ஒனக்கு?”

”தெரியுமே.”

”நீலமா பூக்கும் இல்லியா? அது வேண்டாம்.”

“அழகுக்கு வளப்பினுமே, அதுவா?”

“அதாண்டேய். அதப் பறிச்சாதே. வெள்ளப்பூ பூக்குமே ஒண்ணு. வெள்ளக்காக்கிலம். அதப் பறிச்சிட்டு வா.”

“செரி பாட்டி.”

“பறிச்சம்பளோ, வரும்பளோ ஆரட்டெயும் பேசருது, கேட்டியா.”

“வோ.”

அவன் கொண்டுவந்த இலையைக் கசக்கி மோந்து பார்த்தாள். மைபோல அரைக்கச் சொல்லி வழித்தெடுத்தாள். தச்சம்மையின் கழுத்தில் பற்று போட்டுவிட்டு அதன் எதிர்ப்புறக் கையைத் தலைக்கு மேல் வளைத்துத் தோளில் தொடும்படிச் செய்தாள். கழுத்துக்குள் இறுக்குவதுபோல வலியெடுத்ததும் நிறுத்தினாள். வெற்றிலையில் பொதிந்து கொடுத்த மருந்தைச் சவைத்து இறக்கியதும் வலி தீர்ந்தது. தொண்டை முழுவதும் மரத்ததுபோல ஆயிற்று.

“பேடிச்சாத. நாள செரியாவும். இல்லாட்டா ஆளு சொல்லி விடு. ஒரு நடை கூட வாறேன்.”

கேரளத்தை ஒட்டிய குமரிமாவட்டப் பகுதியினுடைய பேச்சு மொழியில் பதிவு செய்யப்பட்ட இந்தப் பகுதி நாட்டார் மருத்துவம் குறித்த ஒரு இனவரைவியல் விளக்கம். இனவரைவியல் விவரணைக்கு வட்டார மொழி முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதற்கு இந்தப் பகுதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தாம் வாழும் பகுதியின் பண்பாட்டு நடவடிக்கைகளை உற்றுநோக்கி விவரிப்பதில் குமாரசெல்வா ஒரு இனவரைவியலரின் பணியினைச் செய்துள்ளார்.

நாஞ்சில் நாடனுடைய பல கதைகள் இனவரைவியல் விவரிப்பினைக் கொண்டவை. அவருடைய ‘பேய்க்கொட்டு’ என்ற சிறுகதையில் தென்மாவட்ட நாட்டார் தெய்வக் கொடைவிழா இனவரைவியல் தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. நாஞ்சில் நாட்டிலுள்ள ஒரு ஊரில் நாஞ்சில்நாட்டுப் பிள்ளைமாருக்குச் சொந்தமான சுடலைமாட சாமி கோவிலில் நடைபெறும் விழாவில் வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, கம்பாட்டம், படைப்பு, சாமியாட்டம், உயிர்ப்பலி கொடுத்தல், ஊர் மக்களின் செயல்பாடுகள் போன்றவை நடைபெறுவதை நாஞ்சில்நாடன் நுட்பத்துடன் கலைநயத்தோடு விளக்கியுள்ளார்.

அழகிய பெரியவனின் ‘மண்மொழி’ என்ற சிறுகதையில் ஊரின் பழமை கெட்டுவிட்டதை வெள்ளையன் நினைப்பதாக ஒரு பகுதி:

மெதுவாக அவன் நடக்கத் தொடங்கிவிட்டான். ஊரிலே இருந்த காலங்களில் இருந்த பழைய கட்டிடங்களை இப்போது அதிகம் பார்க்க முடியவில்லை. பெரும்பாலானவை இடிக்கப்பட்டோ அல்லது மாற்றம் செய்யப்பட்டோ, புதிய கட்டிடங்களாகவோ இருந்தன. என்ன பெரிய புது கட்டிடங்கள். அந்தக் காலக் கட்டிடங்களைப் போல வருமா? வீட்டைப் பார்த்தாலே பாசம் பொங்கும். அந்தக் கட்டிடமே புன்னகை செய்து வரவேற்கிற மாதிரி இருக்கும். இப்போது கட்டுகின்றவை அட்டைப் பெட்டிகள் போல இருந்துகொண்டு முறைக்கின்றன. நகரத்தில் எல்லாக் கட்டிடங்களுமே அதுபோலத்தான் இருக்கின்றன. நகரத்து மனிதர்களைப் போலவே அவைகளும் உறுத்தும் கண்களுடன் முறைக்கின்றன. மனிதர்களின் முகத்திலும், வீடுகளின் முகத்திலும் இருந்த ஜீவகளை போய்விட்டது போலத் தெரிகிறது.

இந்தச் சித்திரிப்பு ஓர் ஊரில் நிகழும் மாற்றங்களைக் கூர்மையாக வெளிப்படுத்தும் இனவரைவியல் விவரிப்பாகும்.

•••

பண்பாட்டைப் பற்றி அக்கறை கொள்ளாத பல சிறுகதைகள் தமிழில் தொடக்கக் காலத்தில் வெளி வந்தன. திராவிட இயக்கச் சிறுகதைகள் சமூகப் பிரச்சினையை முன்னிறுத்துவதாகக் கூறிக் கொண்டு பத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பண்பாட்டுக் கூறுகளைச் சொல்லத் தவறிவிட்டன. மானுடப் பண்பாட்டு நடவடிக்கைகளை அவை பிற்போக்குத் தனமானவை என்று கணித்தன. அதனால் அக்கதைகளில் இனவரைவியல் கூறுகளை எதிர்பார்க்க இயலாது.

சோதனை முயற்சியாக நவீனத்துவ, பின்நவீனத்துவக் கதைகளைப் படைப்பவர்கள் கதை வடிவத்துக்கும், மொழி விளையாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் பலர் இனவரைவியல் சித்திரிப்புகளைப் பற்றி அக்கறை காட்டவில்லை. பின்நவீனத்துவக் கதைகளிலும் இனவரைவியல் சித்திரிப்புக்களைக் கொண்டு வர இயலும்.

இனவரைவியல் என்பது விவரிப்புத் தன்மை கொண்டது. எனவே, இனவரைவியல் சிறுகதைகளில் எழுத்தாளர்களின் விவரிப்பை எடுத்துக்காட்டாகத் தராமல் விளக்க இயலாது. எனவே, இந்தக் கட்டுரை சிறுகதைகளில் காணப்படும் இனவரைவியல் கூறுகளை ஒரு சில எடுத்துக்காட்டுக்களுடன் தர முயற்சித்துள்ளது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும்போது அக்கதைகளில் காணப்படும் இனவரைவியல் கூறுகளை இனம் காண இயலும். ஒரு பண்பாடு சார்ந்த பல எழுத்தாளர்களின் இனவரைவியல் விவரிப்புகளை ஒப்பு நோக்கும் போது அந்தப் பண்பாட்டின் பல குரல்களை வாசகர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பெருமாள் முருகன், பாமா, மீரான் மைதீன், க.சீ. சிவகுமார், குறும்பனை சி. பெர்லின், எஸ். அர்ஷியா போன்றோரின் கதைத் தொகுப்புக்களை தனித்தனியாக இனவரைவியல் பார்வையில் ஆய்வு செய்வதற்கு இடமுண்டு.

பார்வை நூல்கள்

ஆதவன் தீட்சண்யா, 2010 : சொல்லவே முடியாத கதைகளின் கதை, சென்னை : பாரதி புத்தகாலயம்.

அழகிய பெரியவன், 2010 : குறடு, சென்னை : கலப்பை.

குமாரசெல்வா, 2009 : கயம், நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம்.

செயப்பிரகாசம், பா. 2007 : பா. செயப்பிரகாசம் கதைகள் முழுமையான தொகுப்பு, சென்னை : சந்தியா பதிப்பகம்.

நாஞ்சில் நாடன், 1993 : பேய்க்கொட்டு, கோயமுத்தூர் : விஜயா பதிப்பகம்.

பக்தவத்சல பாரதி. 2005 : மானிடவியல் கோட்பாடுகள், புதுச்சேரி : வல்லினம்.

————————- 1999 : பண்பாட்டு மானிடவியல், சென்னை : மணிவாசகர் பதிப்பகம். (இரண்டாம் பதிப்பு).

மாசில்லாமணி, 2004 : காமராசர் மாவட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய அருந்ததியரின் நாட்டார் வழக்காறுகள் – ஓர் இனவரைவியல் ஆய்வு, மனோன்மணியம் சுந்தரனார் பல்க்கலைக்கழக முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு, பாளையங்கோட்டை : நாட்டார் வழக்காற்றியல் துறை.

Brunvand, Harold 1986 : Study of American Folklore, London : WW Norton & Co.

Denzin, Norman, K. 1997 : Interpretive Ethnography, Ethnographic Practices for the 21st Century, New delhi : Sage Publications.