என்னை உறக்குவதற்கு நீ ஒருகாலத்தில் பாடிய
கண்ணீர் பாட்டையும் கடன்பெறுகிறேன் நான்.
இன்று நான் தாலாட்டுப் பாடுகிறேன்;ளூ உறங்கு என்
தாயே, இனி அல்லலில்லை, முக்தையாகிவிட்டாய்!
பிறவி கடன், குருதிப்பால் கடன், நாவில்
நின் விரல் பொன்தேனைத் தடவிய கணத்தில் பூத்த
சங்கீதமும் அம்மா என்ற சொல்முதல்
மின்னித் தெளிந்த படிமங்களும் கடன்.
மீளாக் கடனுக்குக் கணக்கு வைக்காமல்
கவனித்தாய் என்னைநீ அந்திம நாள்வரை.
ஏதும் பதிலுக்குத் தர இயலவில்லை உன்
தங்கமகன் பாடி நடந்தான் சஞ்சாரியாய்….
எவ்வளவு தானெடுத்தாலும் கொஞ்சமும் குறையாத
சொத்து அது தாய்மட்டுமே உலகில்.
பேற்றுவலியால் கடன்மீட்டு விடுவார்கள் பெண்மக்கள்
எண்ணிப்பார்த்தால் கடனாளிகள் ஆண்மக்களே என்றைக்கும்
பேசாமல் எப்படிநீ கிடக்கிறாய், உன்
முன்கோபமெங்கே, சினங்கொண்ட அங்க
பாவங்களெங்கே, அலையடிக்கும் கடல்
இவ்வாறு நிசப்தமாயிருப்பது எப்படி!
வாழ்க்கையே போராட்டமென்று நீ
தோற்றுப்போகாமல் போராடினாய் இறுதிவரை
மௌனமாய் வந்தது மரணம், இத்தோல்வியும்
மேன்மையானதே: அபிமானம் என்றுமே உன் சொத்து
எல்லாம் முடிந்தது முன்கோபமும் கோபத்தின்
உள்ளிருக்கும் நன்மையும் வறுமைப் பிணியின்
உள்ளேயும் வெடித்துக்கிளம்பிய தானமாம்
தர்மத்தின் சொர்க்கப் பிரகாசமும்!
இல்லை! நீ கண்திறக்கமாட்டாய்ளூ மக்கள் தன்
சுடுசொல்லால் மனம் வேகமாட்டாய்
அர்த்தம் நிறைந்த உள் ஏசல்மொழிகளின்
சுத்தம் உன் நாவில் தோன்றாது இனி!
சத்தியத் தூக்கத்தில் நீ லயித்துவிட்டாய், துக்க
வருடக் கொடுங்காற்றிலிருந்து உன் உயிரும்
திரைந்து திரைந்து தளர்ந்து இப்போது
நித்தியமானதாய் கரைந்து ஓங்காரத் துணுக்காகிவிட்டது!
உன் பாசவெள்ளத்தில் குளித்து இனி
என் பாவக் குடம் உடைக்கிறேன் நான்.
நெருப்பிடுகிறேன் நான் குடியிருந்த வீட்டுக்கு
சக்தி கிட்டட்டும் என் வாழ்வில்!
உன் உடம்பினின் றங்கமாய் வந்தேன் பூமியில்
உன்னை மிதித்து வளர்ந்து, உன் தியாகமும்
நன்மையும் தோதாக்கி உயர்ந்து, இப்போது
உன் உடம்பை எரித்து நான் புத்திரனானேன்.
துக்கம், சுகம், வெற்றி, தோல்வி, எல்லாம் மாயை
உண்மை இந்நெருப்பேளூ அக்கினியே உன்னை வணங்குகிறேன்.
மலையாள மூலம்: ஸ்ரீகுமாரன் தம்பி
தமிழில்: நா. இராமச்சந்திரன்